×

வேண்டிய வரம் கிடைக்காததால் கோயில் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்; ரகளை செய்த வியாபாரி கைது

சென்னை: சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்பன் நாயக்கன் தெரு சந்திப்பில் ஸ்ரீவீரபத்ர சுவாமி தேவஸ்தானம் கோயில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் பூசாரி வெங்கடசுப்பிரமணி கோயிலை திறந்துள்ளார். காலை 8.45 மணிக்கு கோயிலுக்கு வந்த மர்ம நபர், போதையில் சாமி கும்பிட வந்தார். அப்போது திடீரென பீர்பாட்டிலில் பெட்ரோல் நிரம்பி வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.

அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது அந்த சத்தம் கேட்டு கோயில் பூசாரி, சாமி கும்பிட வந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். சத்தம் கேட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் கோயிலுக்கு வந்தனர். பின்னர், அங்கிருந்து தப்பியோட முயன்ற மர்ம நபரை மடக்கி, பிடித்து, கொத்தவால்சாவடி சட்டம்-ஒழுங்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் சென்னை சவுகார்பேட்டை ஆதியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த முரளிகிருஷ்ணன் (39) என்பதும், வியாபாரியான இவருக்கு மனைவி, குழந்தை உள்ளதும், கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளாக ஸ்ரீவீரபத்ர சாமியை கும்பிட்டு வருவதாகவும், அவர் கேட்பது எதையும் செய்து தரவில்லை எனவும், எதுவும் செய்யாததால் கோபத்தில் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வேண்டிய வரம் கிடைக்காததால் கோயில் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்; ரகளை செய்த வியாபாரி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sriveerabhadra Swamy Devasthanam Temple ,Kothavalchavadi Govindappan Nayakkan Street Junction, Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்